Thursday, December 12, 2013

வேலூர் புரட்சி ஒரு கண்ணோட்டம்

இப்பொழுது உள்ள இளைங்கர்களுக்கு வேலூர் புரட்சியைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே வரலாறை நாம் படித்திருக்கிறோம்....அதை இப்பொழுது எண்ணிப் பார்த்தால் வருத்தமாகத்தான் உள்ளது. இப்பொழுது இந்த வேலூர் புரட்சியைப் பற்றி சற்று படிப்போமே!!! 1806 ம் ஆண்டு ஜூலை 10 ம் தேதி வேலூர் கோட்டையிலிருந்த இந்திய சிப்பாய்கள், வெள்ளையர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். இந்தப் புரட்சியே வேலூர் புரட்சி எனப்படுகிறது. புரட்சிக்கு என்ன காரணம்? 1799ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தானுக்கும் நிஜாம் மற்றும் மராட்டியர்கள் ஆதரவு பெற்ற பிரிட்டிஷ் படைக்கும் போர் நடைபெற்றது. இதில் திப்பு கொல்லப்பட்டார். இது தென்னிந்தியா முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்த பாளையக்காரர்கள் அனைவரும் இணைந்து 1800-1801 ஆண்டுகளில் தொடர்ந்து புரட்சி நடவடிக்கைகளில் இறங்கினர். இதில் திப்புசுல்தானின் மகன்களும் பங்கு கொண்டனர். திப்புவின் குடும்பத்தினர் அனைவரும் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இதனால் வேலூர் நகரம் புரட்சியின் மையப்பகுதியாக விளங்கியது. இதே நேரத்தில் இந்திய சிப்பாய்களுக்கு ஆங்கில அரசு பல புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. “மாட்டுத்தோலினால் செய்யப்பட்ட பன்றிக்கொழுப்பு தடவப்பட்ட தலைப்பாகை அணிய வேண்டும், மீசையின் அளவை குறைக்க வேண்டும், தாடி வளர்க்கக்கூடாது” போன்ற கட்டளைகள் இஸ்லாமிய சிப்பாய்கள் மத்தியிலும், திருநீறு அணியக்கூடாது போன்ற கட்டளைகள் இந்திய சிப்பாய்கள் மத்தியிலும் பெரிய கொந்த்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 1806 ஜூலை 10 ம் தேதி அதிகாலை 2 மணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் புரட்சி வெடித்தது. வேலூர் கோட்டைக்குள் அணிவகுத்துச் சென்ற இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேய படைத்தளபதிகளை சுட்டுக்கொன்றனர். பீரங்கிகளால் தாக்கிக்கொண்டே முன்னேறினர். இந்திய சிப்பாய்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்த கர்னல் மிக்கிராங் சுட்டுக்கொல்லப்பட்டான். மூன்றே மணிநேரத்தில் புரட்சியாளர்கள் கோட்டையை கைப்பற்றினர். திப்புவின் புலிக்கொடியை கோட்டையில் ஏற்றினர். சிலமணி நேரங்களில் ஆற்காட்டிலிருந்தும் மற்ற பகுதிகளில் இருந்தும் வந்த ஆங்கிலேயப் படை வேலூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றியது. அதில் மூவாயிரம் புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஆயிரக்கணக்கான சிப்பாய்களுக்கு ஆங்கிலேய அரசு மரணதண்டனை வழங்கியது. புரட்சி தோல்வியுற்றாலும் ஆங்கிலேய அரசிற்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியதாலும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டியதாலும் இந்தப்புரட்சி வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாக பதிந்துபோனது.

No comments:

Post a Comment